பாபாஜியின் கிரியா யோகம் என்றால் என்ன?


பாபாஜியின் கிரியா யோகமானது கடவுள் எனும் மெய்யறிவுடன் ஒருமித்து ஆன்மானுபவம் பெறுவதற்கான ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாகும். பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார் இந்தியாவின் மாபெரும் சித்தர்களில் ஒருவரான மஹாவதார் பாபாஜி. கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 5 கிளைகளாகப் பிரித்து உட்கொண்டுள்ளது.

5 Branches of Babaji's Kriya Yoga

கிரியா ஹத யோகம்: உடலைத் தளர்த்திக் கொள்வதற்கான பயிற்சிகளான ஆசனங்கள், ‘பந்தங்கள்’ எனப்படும் தசைப்பூட்டுக்கள் மற்றும் உள-உடல் குறிகள்/அசைவுகளான முத்திரைகளை உள்ளடக்கியதுதான் கிரியா ஹத யோகம். இவற்றை பயிற்சி செய்வதன் மூலம் மிகுந்த ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை பெற முடியும். அத்தோடு, உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்கள் மற்றும் சக்தியின் வழித்தடங்களான நாடிகளை எழுப்பவும் முடியும். பாபாஜி, மிகுந்த பயன் தரக்கூடிய குறிப்பிட்ட 18 ஆசனங்களை இதற்காக தேர்ந்தெடுத்தார். இவை பல்வேறு நிலைகளை உட்கொண்டு ஜோடிளாகவும் கற்பிக்கப்ப்டுகின்றது. நமது ஸ்தூல உடலை நாம் நமக்காகப் பேணாமல், இறைவனின் கோவிலுக்கான ஒரு வாகனமாகப் பேணிடல் வேண்டும்.


கிரியா குண்டலினி பிராணாயாமம்: இந்த சக்தி வாய்ந்த சுவாசப் பயிற்சியின் மூலம் ஒருவரது அபரிதமான சக்தி மற்றும் மேல்-மன விழிப்புணர்வை எழுப்பி தம் முதுகுத்தண்டின் அடிப்பகுதியினின்று உச்சந்தலை வரையுள்ள ஏழு முக்கியமான சக்கரங்கள் வழியாக பாய்ச்ச முடியும். இது ஒவ்வொரு சக்கரத்துடனும் தொடர்புடைய மறைந்திருக்கும் பேராற்றலை வெளி கொணர்ந்து ஐந்து கோசங்களிலும் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவராக ஒருவரை மாற்றுகிறது.


கிரியா தியான யோகம்: படிப்படியான நிலைகளாக அமைந்துள்ள இத்தொடர் தியானப் பயிற்சி நம் மனதைக் கட்டுக்குள் அடக்கி, நமது ஆழ் மனதை தூய்மை செய்வதற்கான ஒரு விஞ்ஞான பூர்வமான கலையாகும். இதன் மூலம் மனத்தெளிவு, மனதை ஓர் நிலை படுத்தும் திறன், தொலை நோக்கு, அறிவு மற்றும் படைப்பாற்றல் வளர்வதோடு மட்டுமல்லாது மூச்சற்ற நிலையில் இறைவனிடம் ஒன்றிடும் ‘சமாதி’ நிலையில் ஆன்மானுபவமும் பெறவியலும்.


கிரியா மந்திர யோகம்: அமைதியாக மனதிற்குள் ஜெபிக்கப்படும் மெல்லிய ஒலிகளின் மூலம் உள்ளுணர்வு, அறிவாற்றல் மற்றும் சக்கரங்களை எழுப்பலாம். ஒரு மந்திரமானது, ‘நான்’ எனும் எண்ணத்தைச் சார்ந்த மனதின் செயல்பாடுகளுக்கு ஒரு மாற்றம் தந்து அபரிதமான சக்தியினைச் சேமிக்க வழி செய்கின்றது. அதே நேரத்தில் ஆழ் மனதின் பழக்கங்கள் தூய்மையும் அடைகின்றது.


கிரியா பக்தி யோகம்: நமது ஆன்மாவினுள் இறை தேடலைப் பயிர் செய்தல். பக்தி சார்ந்த செயற்பாடுகள் மற்றும் தொண்டுகளின் மூலம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆன்மீக பரவசத்தை எழுப்பலாம். பக்தி பாடல்கள், சடங்கு-வழி வழிபாடு, தீர்த்தயாத்திரைகள் மற்றும் இறை வழிபாட்டின் மூலம் அன்பிற்கினிய ஆண்டவனை அனைத்திலும் காண்பதினால் நமது செயல்கள் அனைத்திலும் இனிமை கலக்கிறது.



குரு மந்திரம்

ஓம் கிரியா பாபாஜி நம ஔம்
(பாபாஜியின் கிரியா யோகத்தின் குரு மந்திரம்)

ஓம்: பிரணவம். பிராணத்தில் ஓடும் பிரபஞ்சத்தின் பிரணவ ஒலி.
கிரியா: முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல். தமது செயல்களனைத்தயும் விழிப்புணர்வினைச் செலுத்தும் பொருளாக மாற்றுவதன் மூலம், கிரியா யோக பயிற்சியாளர்களுக்கு இதுவே இலட்சியமாகவும் அதனை அடையும் வாகனமாகவும் ஆகின்றது.
பாபாஜி: கிரியா யோக மரபின் குரு; பண்டைய யோக பயிற்சிகளைத் தொகுத்து அவற்றை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தவர். பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுய சரிதம்’ எனும் நூலில் குறிப்பிடப்படுபவரும் இவரே.
நம: வணக்கங்கள் (அ) ‘நான் உங்களை அழைக்கிறேன்’
ஔம்: நம் அகத்தினுள் ஒத்ததிரும் பிரணவ ஒலி.

இந்த குரு மந்திரமான ‘ஓம் கிரியா பாபாஜி நம ஔம்’, நமது உயிர்த்துடிப்பை பாபாஜியின் அருள் துடிப்புடன் இணைத்து, அந்த மாபெறும் சித்தர் கிரியா பாபாஜியின் அருளை வழங்கும் சக்தி கொண்டுள்ளது. இம்மந்திரத்தின் மூலம் அவர் தன்னைத் தனது பக்தர்களுக்கு வெளிப்படுத்துகிறார். இம்மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபிப்பதன் மூலம் நமது சஹஸ்ர சக்கரத்தில் அமைந்துள்ள அந்தர்-குரு (அ) பேரறிவாற்றலை நாம் தொடர்பு கொள்ளலாம். இம்மந்திரமே விழிப்புணர்வும் அதன் சக்தியுமாகிறது. ஆற்றல் வாய்ந்த இம்மந்திரத்தின் மூலம் குரு தனது சக்தியைச் சீடனுக்கு அளிக்கிறார்; இந்த சக்தி அதே மந்திரத்தின் மூலம் சீடனுள் நுழைகின்றது. குருவின் சொல்லே மந்திரத்தின் வேர் ஆகின்றது; மந்திரம் குருவுருவாகவும் திகழ்கின்றது.


கிரியா யோகம் முழு “விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல்”. இது நம்மை உணர்ந்து நமது உண்மையான சொரூபதினை அறியும் வழியாகும். பாபாஜியின் கிரியா யோகத்தில், ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், மற்றும் மந்திரம் ஆகியவற்றை பயிற்சிகள் முழு விழிப்புணர்வுடன் ஒருங்கிணைக்கப் படுகின்றது. மேலும், நமது எண்ணங்கள், சொற்கள், ஆசைகள் மற்றும் அனைத்து செயல்களிலும் விழிப்புணர்வானது ஒருங்கிணைக்கப் பெறுகின்றது. இந்த சாதனை நம்மை மேலும் விழிப்படைந்த மனிதர்களாக மாற்றும் பேராற்றல் கொண்டதாகும். இதற்கு நமது உடல், உள்ளம், மனம் மற்றும் ஹ்ருதயம் ஆகியவை தூய்மையடைந்து பூரணத்துவம் பெற விரும்பும் ஆன்மாவுடன் ஒத்துழைக்க வேண்டும். பாபாஜியின் கிரியா யோக சாதனையானது தன்னையுணர்ந்து ஸ்தூல, பிராண, மன, விஞ்ஞான மற்றும் ஆன்ம உடல்களில் முழு மாற்றம் கொணர 144 ஆன்மீகப் பயிற்சிகளின் தொகுப்பாகும்.

கிரியா ஹத யோகத்தின் முதல் குறிக்கோள் உடல் மற்றும் உள்ளத்தின் முழு தளர்வே ஆகும். ஆசனப் பயிற்சியின் மூலம் பருஉடல் பல்வேறு உபாதைகளிலிருந்து விடுபட்டு தூய்மை அடைகின்றது. பல்வேறு ஆசனங்களின் பயிற்சி நமது உடலை மிகவும் லேசாகவும், எளிதில் வளையும் தன்மையுடனும், மிகுந்த உற்சாகமுற்றதாகவும் மாற்றுகின்றது. மேலும் இங்கு தொகுத்து வழங்கப்படும் 18 ஆசனங்களின் பயிற்சி, நமது முதுகுத் தண்டில் அமைந்துள்ள சக்தி கூடங்கள், குண்டலினி, மற்றும் மேம்பட்ட விழிப்புணர்வை எழுப்புகின்றது.

கிரியா குண்டலினி பிராணாயாமம் நமது நாடி மற்றும் நரம்பியல் மண்டலத்தில் அமைந்துள்ள நுண்மையான பகுதிகளின் மேல் பணி செய்கின்றது. நாடி மற்றும் நரம்பு மண்டலங்களை தூய்மை செய்து அவற்றினுள் உயிர்ச் சக்தியினைத் தடையின்றி ஓடவிடுதலாகும். இறுதியில் இப்பயிற்சிகள் சுழுமுனை நாடியினை எழுப்பி ஆதன் மூலம் குண்டலினி சக்தியை மேல் நோக்கிப் பாய்ச்சுகிறது.

பாபாஜியின் கிரியா யோக தியானம் ஆழ் மனதில் நாம் உணரும் உண்மையினை வெளி கொணர்ந்து நமது விழிப்பு நிலையிலும் அதனை உணர்த்தி நிலை பெறச்செய்கின்றது. நமது விழிப்புணர்வின் தன்மையே நாம் வாழும் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கின்றது. ஆகையால் எண்ணங்களை முழுவதுமாக நிறுத்தி ஒரு வெற்றிடதிற்குச் செல்லாமல், ஆற்றல் வாய்ந்த நம் தியான முறைகள் மனவலிமை, காட்சிப் படுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, உள்ளுணர்வு மற்றும் அகத்தூண்டுதல் பாய்ந்தோட வழி வகுக்கின்றன. மேலும் நமது மனதை ஓர்நிலைப் படுத்தும் திறனை மேம்படுத்தி நம் விழிப்புணர்வு முழுவதும் ஆன்மாவை நோக்கித் திரும்பும்படி செய்கின்றன.

கிரியா மந்திர யோகம் என்பது அமைதியாக சக்கரங்களின் பீஜ மந்திரங்களான ஒலிகளை ஜெபிப்பதன் மூலம் இறைத்தன்மையைத் தூண்டுவதாகும். இப்பயிற்சியின் மூலம் ஒருவர் தன் முழு விழிப்புணர்வோடு சேர்த்து தனது சித்தத்தையும் இறையுணர்வினை நோக்கித் திருப்ப முடிகிறது; இதன் மூலம் இறை சக்தியும் அருளும் தடையின்றி அவரை ஆட்கொள்கின்றது.

பாபாஜியின் கிரியா யோகத்தை பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் தன்னையே பயின்று தனது தீய பழக்கங்கள், ஆசைகள், பயம் மற்றும் பல்வேறு தொந்தரவுகளிலிருந்து விடுபடமுடிகின்றது. மெதுவாக அவர் தம் அக சாட்சித்தன்மை நிலையை அடைந்து முழு அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிக்கலாம். தமது அகங்காரத் தன்மையை விட்டொழிப்பதன் மூலம் ஒருவர் தன் முழுப் பண்பினையே மாற்றியமைத்துக் கொள்ள முடிகின்றது; ஒருவர் தன்னை அன்பின் கருவியாகவும் அதீத படைப்பாற்றலின் அறிவாகவும் உணரத் துவங்கி, பிறருக்கு ஆனந்தத்தை அளித்து, இவ்வுலகிற்கு மேலும் மெருகூட்டுகின்றார்.

பாபாஜியின் கிரியா யோகம் எனும் இந்த ஆன்மீக மரபில் ஒருவர் ‘கண்களைத் திறந்து கொண்டே கனவு காணும்’ நிலையிலிருந்து ‘விழித்தெழுகின்றார்’. தன்னையுணர்ந்து ஆன்மானுபவம் பெறுவதற்கு ஒரு முழுமையான ஆன்மீகப் பாதையாகிய பாபாஜியின் கிரியா யோகம், நமது வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியதாகும். சுய ஒழுக்கம் மிகுந்த இந்தப் பாதை ஒருவரைத் திறந்த மனத்துடன் கருணை மிகுந்த வாழ்வைக் கடைப்பிடிக்க உதவுகின்றது.


கிரியா யோகத்தின் தோற்றம்

சிவ யோகத்தில் பூரணத்துவம் பெற்ற யோக சித்தர்களிடமிருந்து நேரடியாக வடிந்து வருகிறது இம்மரபு. அகஸ்த்தியர் மற்றும் போகனாத சித்தர் ஆகியோர் கற்பித்த யுக்திகளிலிருந்து தனது கிரியா யோகத்தைத் தொகுத்தார் கிரியா பாபாஜி நாகராஜ். 1954 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் இமயமலையில் பத்ரிநாத்திற்கு அருகில் மாபெறும் யோகியான S.A.A.இராமையாவிற்கு கிரியா யோக தீட்சை வழங்கினார் பாபாஜி.

1983 ஆம் ஆண்டு, யோகி இராமையா, மார்ஷல் கோவிந்தனுக்கு 144 கிரியா யுக்திகளைப் பிறருக்கு கற்பிக்க சில கடினமான நிபந்தனைகளை விதித்தார். மார்ஷல் கோவிந்தன் அவர்கள் அப்பொழுது 12 வருடங்களாக தடையின்றி வாரத்திற்கு 56 மணி நேரம் கிரியா யோகம் பயிற்சி செய்து வந்தார். மேலும் அவர் 1981 ஆம் ஆண்டு, இலங்கை கடற்கரையில் ஒரு வருட நீள மௌனம் அனுஷ்டித்து யோக பயிற்சியில் ஈடு பட்டிருந்தார். யோகியார், தான் விதித்த அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே மார்ஷல் கோவிந்தன் 144 கிரியா யோக யுக்திகளைப் பிறருக்குக் கற்பிக்கலாம் என்றார். கோவிந்தன் அவர்களுக்கு அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற மேலும் 3 வருடங்கள் ஆயின. அந்நேரத்தில் யோகியாரோ, கோவிந்தனை மேலும் காத்திருக்கவிசைத்தார். தனது சீடர்களை ‘குரு’ வின் திருவடி வரை அழைத்து வந்து விட்டால் அவர்களுடனான தனது வேலை முடிந்துவிடும் என்று யோகியார் அடிக்கடி கூறுவார். 1988ஆம் வருடம், கிரிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது ஏற்பட்ட பல ஆழ்ந்த ஆன்ம அனுபவங்களின் மூலம், தனது ஆசிரியரின் ஆசிரமம் மற்றும் சங்கத்தை விட்டு விலகி பிறருக்கு கிரியா யோக உபதேசம் வழங்க மார்ஷல் கோவிந்தனுக்கு ஆணை வந்தது.

அன்றிலிருந்து, மார்ஷல் கோவிந்தன் அவர்களின் வாழ்க்கை குருவின் ஒளி, தொடரும் வழிகாட்டல், உள்ளுணர்வு மற்றும் அக உந்துதலின் மூலம் வழி நடத்தப்பட்டு பிறருக்கு பாதை காட்டுவதாக அமைந்துள்ளது. 1989ஆம் ஆண்டு துவங்கி, அவரது வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது; கதவுகள் தாமாகவே திறந்தன; அவரது புதிய குறிக்கோள் நிறைவேற அனைத்தும் தாமாகவே அமைந்தன. முதலில் மாண்ட்ரியாலில் வார இறுதிகளில் மட்டும் கிரியா யோகம் பயிற்றுவித்து வந்த கோவிந்தன் அவர்கள், 1991ஆம் ஆண்டு கிரியா யோகத்தைப் பற்றி எழுதப்பட்ட தனது முதல் நூலின் வெளியீட்டிற்கு பின் உலகம் முழுவதும் கிரியா யோகம் பயிற்றுவிக்கலானார். தான் பெற்ற இந்த ‘ஒளி’யை, விலைமதிப்பற்ற ஆன்மீக விஞ்ஞானக் கலையை இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் பகிர்ந்து கொண்டதில் பேரானந்தம் அடைகிறார். மேலும் பதினாறு முன்னேற்றமடைந்த மாணவர்களுக்கு, பிறருக்கு கிரியா யோகம் பயில்விக்கும் பயிற்சியும் அளித்துள்ளார்.


செய்தி




Order builds school near Rudraprayag

எமது அறக்கட்டளையானது ருத்ரப்ரயாக் அருகில் நிர்மானித்துக்கொண்டிருக்கும் பாடசாலை..

விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யலாம்.


Silence -Mouni Baba

மனிதனுக்கும் இறைவனின் விந்தைகளுக்கும் இடையேயான முதல் சந்திப்பு மௌனத்தின் மூலமே ஏற்படுகிறது. மௌனத்தின் அமுதத்தை ருசியுங்கள்.

download

 

© 1995 - 2024 · Babaji's Kriya Yoga and Publications · All Rights Reserved.  "Babaji's Kriya Yoga" is a registered service mark.   ॐ Mahavatar Babaji ॐ